நாற்பது வயதினைத் தொட்டிருக்கும் இன்றைய நடுத்தர வர்க்கத்து பெண்களில் பலரது வாழ்க்கை அவர்களுக்கு மன உளைச்சலுடன் தான் கழிகிறது. இதற்கு முழுமையாக
அவர்களது குடும்பச் சூழல் தான் காரணம் என்பதை பலரும் உணர்வதில்லை. மாறாக, அப்பெண்களையே குறை கூறுகின்றனர். உடலும் மனமும் நொந்து போகவா திருமணம் செய்து கொண்டோம்?” என்று வருந்தும் பெண்களே அதிகம்.

மன உளைச்சல் அழைத்து வரும் நோய்கள் :
பெண்களுக்கு, இந்த வயதில் குடும்ப சூழலால் தொடங்கும் மன உளைச்சல், உடல், மன ரீதியான பல பாதிப்புகளும், நோய்களும் ஏற்படக் காரணமாகிறது. இதனைக் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
திருமணம் முடித்ததில் தொடங்கி, தன் விருப்பங்களையும், சௌகரியங்களையும் தனது குடும்பத்தாருக்கும், கணவருக்கும், குழந்தைகளுக்குமே விட்டுக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது அவர்கள் மன உளைச்சல். இதற்கு பழமொழிகள் வேறு விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்று எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல பழமொழிகளும் , சடங்குகளும் வேறு உள்ளது.
கட்டுப்பாடுகள்:
பல வீடுகளில், வயது வந்த பிள்ளைகளும், அந்தப்பெண்ணின் கணவர் அவர்களது அம்மாவுக்கு, அலைபேசி, தனக்கு வரும் அழைப்புகளைக்கூட பேச சுதந்திரம் தருவதில்லை.அவளுக்கென்று தனியே நட்புகள் கூட கிடையாது.
அவளது பொழுதுபோக்குகளை கூட எள்ளி நகையாடுகிறார்கள்.
பண்பலையில், விருப்பமான பழைய பாடல்களை கேட்டப்படியே வேலைகளை செய்தால், “இந்த பாட்டை ஏன் கேக்குற.. ஒரே போரா இருக்கு.. நிறுத்து..” என்று அதட்டுவதும் “உன் பாட்டை கொஞ்சம் நிறுத்தறியா, ஒரே டிஸ்ட்டர்பன்சா இருக்கு ..” என்று முகத்திலடித்தாற்போல் சொல்வதும், சர்வசாதாரணமாக அரங்கேறும் அவலங்கள். புத்தகம்
படித்தல் , சினிமா பார்த்தல் என அவளுக்கான பொழுதுபோக்கு , ஆசைகள் எல்லாம் நசுக்கப்படுகிறது.
மடைமாற்றம்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கேனும் அவர்களின் அலுவலகப் பணி சிறந்த மாற்றாகவும், தோழிகளுடன் நட்பு பாராட்டல் , செய்யும் வேலைக்கு ஊதியம் கிடைக்குமென்ற நிலையும் உள்ளது. ஆனால், அங்கும் பெண்களுக்கு பல வகையில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. இதில் வீட்டு வேலைகள் என கூடுதல் பணிச்சுமை வேறு.
வீட்டிலிருக்கும் பெண்களின் நிலை வேதனைக்குரியது. நாள் முழுவதும் பார்த்துப்பார்த்து வேலை செய்தாலும், வீட்டில் சும்மாத்தானே இருக்க!
இப்படியெல்லாம் குடும்பத்தினரால் அவமானப்படுத்தும் ஒருவராவது அந்தப்பெண்ணின் வேலைகளை தொடர்ந்து இரு நாட்கள் செய்திட முடியுமா என்றால் கேள்விக் குறி தான்.
மேற்கண்டவை ஒரு நாளில் நடக்கும் சில சம்பவங்கள் தான்.. இதுபோல அவள் அவமானம் அடையும் பொழுதுகளால் தான் அவள் வாழ்க்கையே நடக்கிறது.
எந்தவொரு கணவரும் அவர்களது வீட்டாரும் எண்ணுவதில்லை ,அவள் பிறந்தது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உழைத்து மடிவதற்க்கு மட்டுமல்ல என்பது தான்.
எல்லாவற்றுக்கும் மேல் அவள் ஒரு தனி மனுஷி , அவளுக்கென்று தனி மனமுண்டு என்பதை உணர்ந்து, அவள் உணர்வுகளை அலட்சியமும் அவமானமும் செய்யாமல், அவற்றுக்கு மதிப்பளியுங்கள்.
குடும்பத்தின் ஆணிவேரான பெண் மகிழ்ச்சியாக இருந்தால் அதன் பிரதிபலிப்பு அந்த குடும்பம் முழுவதும் ஜொலிக்கும்!














Leave a Reply