சுற்றுலா செல்கிறீர்களா? உங்கள் சர்க்கரையின் அளவை எப்படி கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பீர்கள்?

கோடை விடுமுறை வந்தாலே வெயிலையும் தாண்டி கொண்டாட்டமே! விருந்து, உறவினர்கள் , திருவிழாக்கள் , திருமணம் போன்ற வைபவங்கள் மற்றும் சுற்றுலாத்தலம் என்று முப்பது நாட்கள் விடுமுறை செல்வதே தெரியாது. இங்கு தான் சர்க்கரை நோயாளிகள் தவித்து விடுவார்கள். உணவுக்கட்டுப்பாடு , உடற்பயிற்சி என ஒழுங்கான முறையில் நடந்து வந்த பழக்க வழக்கங்கள் அப்படியே மாறி விடும். திரும்ப அதனை நடைமுறைப்படுத்த பெரும்பாடு படவேண்டும்.கொண்டாட்டங்களுடன் நமது உடல் நலத்தையும் எப்படி பார்த்துக்கொள்வது என்று பார்ப்போம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்:
எளிமையான ஒரு விஷயம் தண்ணீர் குடிப்பது தான். எங்கும் கிடைக்கும் ஒரு பொருள் தண்ணீர் . கோடையின் வெப்பத்தை தணிக்க மட்டும் அல்ல , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இரத்தத்தில் கலந்த சர்க்கரையின் அளவு தண்ணீர் நிறைய குடிக்கும் போது இரத்த ஓட்டம் மிகும் போது உடலெங்கும் உள்ள செல்களுக்கு உணவாக எடுத்து செல்கிறது.
நடைப்பயிற்சி :
காலை நேர மற்றும் மாலை நேரம் தான் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. ஊர்சுற்றி முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்ததும் அங்குள்ள வராந்தாவில் நடக்கலாம். குறிப்பாக உணவிற்கு பிறகு நடக்க வேண்டும். இயன்ற வரை லிஃப்ட் உபயோகத்தை தவிர்த்து மாடிப்படிகளை பயன்படுத்தலாம்.
பயணங்களில் உணவுகள் :
உறவினர் வீடுகளில் சென்று நம் விருப்பப்படி உணவு உண்பது கடினம். நெருங்கிய உறவுகள் விதிவிலக்கு.ஹோட்டல் என்றால் அரிசி உணவுகளைக்குறைத்து ஆம்லெட் , சிக்கன் , பன்னீர் போல எளிதாக எல்லா ஹோட்டல்களில் கூட கிடைக்கும் இவற்றை நிறைய உண்ணலாம். வெள்ளரிக்காய் வாங்கி ரூமில் வைத்துக்கொண்டால் இரவு உணவுக்கு பின் காலை எழுந்தவுடன் மற்றும் பயணங்களில் வெள்ளரிக்காயை உண்பது மிகச்சிறந்த வழிமுறை.
வெள்ளரிக்காய் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். இப்போது தான் நிறைய கடைகள் , ஹோட்டல்களில் ஸ்மூத்தி கிடைக்கிறது. வெஜிடபிள் ஸ்மூத்தி ஏதாவது ஒன்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நாவல் கொட்டை சூரணம் :
நாவல் கொட்டை சூரணம் அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் இதனை ஒரு பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் சென்ற நாட்களில் காலை உணவுக்கு பின் , இரவு உணவிற்கு பிறகு என்று நீரில் கலந்து குடிக்கலாம். மாத்திரைகளை எடுத்து செல்வது போலத்தான்.
நமது திட்டமிடல் தான் எந்தவொரு பயணமோ நிகழ்ச்சியோ அதனை சிறப்பாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *