சுவையான நோன்பு கஞ்சி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்!!

ரமலான் மாதத்தில் மிகச் சரியாக சொல்வது என்றால்அரை நாள் தான் கூடுதலாக நோன்பிருக்கிறார்கள். மிகவும் மன உறுதி பெற இந்த நோன்பு உதவும். வருடத்தின் 11 மாதங்களில் உடலில் தேங்கிய கொழுப்பை கரைத்து மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரையளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது என அறிவியல் கூறுகிறது.

மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது. அதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்!
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்து கறி – 100 கிராம்
( வெஜிடேரியன் இதை தவிர்த்துக் கொள்ளலாம். )
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு –  தேவையான அளவு
தேங்காய் – 1 மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.
  • பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • கடலைப் பருப்பு, வெந்தயம  தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும். (சைவம் எனில் இதனை தவிர்க்கவும்)
  • 2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
  • கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
  • மீண்டும் 11/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.
  • எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.
  • அதனுடன் ஊற வைத்த வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  • அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும்.
  • பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கவும்.
  • இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடும்.
  • நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.
  • பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, பாத்திரத்தை நன்கு மூடிவைக்கவும்.
சுவையான நோன்புக் கஞ்சி தயார்! மதவேறுபாடு இல்லாமல் அனைவரும் விரும்பி உண்ணும் நோன்பு கஞ்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *