தென்னிந்தியர்களின் முக்கிய உணவே அரிசி தான். ஒரு வேளையாவது அரிசி உணவு வேண்டும். பெரும்பாலான உணவு வகைகள் அரிசியால் செய்யப்பட்டது.
கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, வரகரிசி, சம்பா அரிசி, மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலி, சீரக சம்பா, கிச்சடி சம்பா, காட்டு யானம் என வகை வகையாக அரிசிகளை சாப்பிட்டு கட்டுக்கோப்பாக உடலை பராமரித்தவர்கள் நம் முன்னோர்கள். பாரம்பரிய அரிசி வகைகளுக்கான முக்கியத்துவத்தை மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரம் அரிசி என்றாலே பச்சரிசி அல்லது புழுங்கலரிசிதான் எல்லோரும் சொல்வார்கள். இதில் எது சிறந்தது என்று பார்ப்போம்.

பச்சரிசி சர்க்கரையை அதிகரிக்குமா?
நீரிழிவு நோயாளிகள் பச்சரிசியை அறவே தவிர்க்க வேண்டும் ஏனெனில் ஊட்டச்சத்து நிபுணர்கள் வெண்மை விஷங்கள் என்று பட்டியலிட்டிருக்கும் உணவுப்பொருளில் அரிசி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. .
நீரிழிவி நோயாளிகள் பச்சரிசி உணவை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும், இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை சேமிக்கப்படுகிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் பொதுவாக அரிசி உணவை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புழுங்கல் அரிசி ஏன் நல்லது?
புழுங்கலரிசியில் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. புழுங்கலரிசி தயாரிக்க நெல்லை அப்படியே வேக வைக்கும்போது நெல்லின் தோலுக்கு அடியில் உள்ள வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பச்சரிசியில் உமியெடுக்கும் போது இந்தச் சத்துக்கள் அழிந்துவிடுகிறது.
புழுங்கலரிசியை வேகவைப்பதால் நான்கு வருடங்கள் ஆனாலும் அதன் குணம் மாறுவதில்லை. புழுங்கலரிசி வேகுவதற்கு சிறிது நேரம் அதிகரிக்கும் ஆனால் உணவின் சுவையை அதிகரிப்பது புழுங்கலரிசி தான். இந்திய அளவில் தமிழக பொன்னிக்கு அதிக வரவேற்பு உண்டு.
பச்சரிசியும் பலகாரங்களும் :
பச்சரிசி நீளமாக இருப்பதோடு விரைந்து வேகக்கூடியது. இடியாப்பம், கொழுக்கட்டை, முறுக்கு மாவுகளைத் தயாரிக்க முன்னோர்கள் பச்சரிசியை தான் அதிகம் பயன்படுத்தினார்கள். பச்சரிசியை அதிகம் பயன்படுத்தாமல் தவிர்த்து புழுங்கல் அரிசியை பயன்படுத்துவதே நல்லது.
அரிசியில் உள்ள வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு சத்துகள் சமீபத்திய ரகங்களில் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் நெல்களில் தான் சத்துக்களும் முழுமையாக இருக்கும் என்கிறார்கள்.
இயன்றவரை பாரம்பரிய ரக அரிசியைப் பயன்படுத்துங்கள். நீரிழிவு நோயாளிகள் தவிடு நீக்காத அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. அளவோடு அரிசி உணவை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்துக்கு அதுவும் வழி செய்யும்.












Leave a Reply