சித்ராபௌர்ணமியும் அழகிய நிகழ்வுகளை கொண்ட கொண்டாட்டங்களை கொண்டதாக இருந்தது ஒரு காலத்தில் மேற்கு மாவட்டங்களில் நம் சிறுவயதில் கண்டு உண்டு மகிழ்ந்த நாட்கள் இன்றும் நினைவில் .

சித்ரகுப்தனுக்கு வேண்டி மலையளவு பாவத்தை கடுகளவாக குறைத்து பாவபுண்ணிய ஏட்டில் எழுதுமாறு வேண்டி விரதம் இருப்பர் என செவிவழிச் செய்தியாக கேட்டுள்ளேன். ஈரோடு மாவட்டத்தில் கொண்டாடிய சித்திரை நிலவு நாட்கள் அற்புதமானவை.
பெண்குழந்தைகளுக்கு எல்லாம் அன்று சிறப்பு கவனம் தான்.அன்று பெண் குழந்தைகளுக்கு நீளமுடி இருக்கும் என்பதால் சடை தைத்து பட்டுப்பாவாடை ஜிமிக்கி உடன் அலங்காரம் பண்ணி விட எல்லா பெண்குழந்தைகளும் அன்று அழகு பதுமைகளாக வலம் வருவோம்.
பையன்கள் எப்புவும் போல் சேட்டையும் எளிமையாக உலாவருவார்கள். உள்ளூர்வாசிகளும் வர களைகட்டும் விழா. பெண்கள் எல்லாம் மாவு இடித்து விளக்கேற்றுவார்கள் .கும்மியடித்து பாட்டு பாடி அத்தன்னையும் நிலவு வெளிச்சத்தில் நடப்பது தான் தனி உற்சாகம்.
அவரவர் வீட்டில் செய்த கூட்டாஞ்சோறு போன்ற சாதங்களுடன் பகிர்ந்து உண்பார்கள். அது உண்மையிலே ஒரு நிலாக்காலம்.
கும்மிப்பாட்டு :
வளர்இளம் பருவம் முதல் வயதான பெண்கள் உட்பட கலந்து கொண்டு களைக்கட்டும் ஒரு நிகழ்வு. பெரிய பெரிய முற்றங்கள் , சாணி மெழுகிய சுத்தமான தரைகள் , அதில் அழுகுற வரையப்பட்ட பெரிய பெரிய கோலங்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மாவு இடிக்க உரலும், உலக்கையும் தயாராக இருக்கும். மாவு இடித்து அதில் விளக்கு செய்து அதில் விளக்கேற்றி வழிபாடு என்பது மண்மணம் வீசும் விழா.
கும்மிப்பாட்டு பாடுபவர்களின் பாடல் பிரதிபலிக்கும் மண்ணின் சிறப்புகளை , பேச்சுத் தமிழில் பாடப்படும் பாடல் காதுகளுக்கு அத்தனை இதம். வயது வித்தியாசம் இன்றி பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை.இன்றைக்கு இந்த அழகிய விழா அதன் சாராம்சங்களை இழந்தாலும் அத்திப்பூத்தார்போல அதன் இயல்போடு அழகுபட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாகரீகம் என்ற பெயரில் வாழ்வியல்களை தொலைத்து வருகிறோம்.














Leave a Reply